சிந்தனை அவியல்

யாழினி அத்தனின் எண்ணக் கலவை

இசை(ஞானி)யோடு ஒரு பயணம் – 1

Posted by யாழினி அத்தன் மேல் ஜூன்6, 2009

தனக்கு ஒப்புமை தான் தான் என்ற அளவுக்கு தமிழ்த் திரைப்பட உலகில் சுமார் 900 அசல் படங்களுக்கு இசையமத்து, பல கோடி தமிழ் மக்களின் இதயத்தில் குடிகொண்ட ஒரு மாமேதை என்பதை எவரும் மறுக்க முடியாது. இங்கே நான் செய்ய விருப்பது இதுவரை மக்கள் செய்ததிலிருந்து சற்று வித்தியாசமான முயற்சி. இருந்தாலும் இதில் புதிதாக நான் ஒன்றும் செய்யவில்லை. ஒரு முழு வாழ்க்கை பயணத்திற்கான, அதாவது வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளில், இசைஞானி இசையமைத்த எனக்குப் பிடித்த பாடல்களை பொறுக்கி எடுத்துக் கொடுத்துள்ளேன். இதைச் செய்ய தூண்டிய சென்ஷி மற்றும் கோபிநாத்துக்கு நன்றிகள் பல.

1. குழந்தைப் பருவம்:

தாய்மைக்கு பரிசாக வீட்டில் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்து பேர் வைக்கும் நிகழ்ச்சி இன்னமும் சில ஊர்களில் வழக்கமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக இசைஞானி இசையமைத்து 1991-ல் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வருடம், அதுவும் வெறும் பாட்டுக்காகவே ஓடிய “சின்னத் தம்பி” படத்தில் வந்த இந்தப் பாடல் எப்படி மறந்திருக்க முடியும்.

இந்தப் படம் வந்த போது நான் பெங்களூரில் காலந் தள்ளிக் கொண்டிருந்தேன். மேற்கண்ட பாடல் K.S. சித்ரா பாடியது. இந்தப் படத்தில் உள்ள எல்லாப் பாடல்களையும் இசைஞானி அரை நாளில் செய்து முடித்தார் என்று இந்தப் படத்தின் இயக்குனர் P.வாசு டி.வி.-க்கு பேட்டி அளித்தது இன்னும் என் நினைவிலிருக்கிறது. இந்தப் பாடல் எனக்கு பிடித்தது. உங்களுக்கும் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் தந்திருக்கிறேன்.

2. பிள்ளைப் பருவம்:

பிள்ளப் பருவத்திற்கு இசைஞானி நிறைய பாட்டுகள் கொடுத்திருக்கிறார். அவற்றில் எனக்குப் பிடித்த ஒரு பாட்டு நீங்கள் கேட்டவை என்ற படத்தில் இடம் பெற்றது. 1984-ல் வெளிவந்த படம். பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன், பூர்ணிமா ஜெயராம் நடித்தது. எவ்வளவு சிம்பிளான ட்யூன் என்ன “effective”-ஆக இருக்கிறது இல்லையா??

3. மாணவப் பருவம்:

பிள்ளை பெரியவனாகி பிறகு கல்லூரிக்குச் செல்ல, கல்லூரிகளில் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு நிறைய பாடல்கள் உண்டு. உதாரணத்திற்கு “விடிய விடிய நடனம்” என்ற இதயத்தை திருடாதே பாடலைச் சொல்லலாம். இதில் எனக்கு
மிகவும் பிடித்த பாடல் சங்கராபரணம் ராகத்தில் இசைஞானி மெட்டுப் போட்ட “ஏப்ரல் மேயில” என்று இதயம் திரைப்ப்டத்தில் இடம் பெற்ற பாடல். 1991-ல் வெளிவந்த இந்தப் படம், பிரபுதேவாவை முதன் முதலில் வெள்ளித் திரைக்கு அறிமுகப்படுத்திய படம்

4. கல்லூரி/காதல் பருவம்:

காதல் டூயட்ஸுக்காக இசைஞானி செய்த பாடல்கள் கணக்கிலடங்கா. அதனால் குறிப்பிட்ட, எனக்குப் பிடித்த பாடல்களிலிருந்து ஒன்றிரண்டை பொறுக்கித்
தந்திருக்கிறேன். கல்லூரிக்குச் செல்லும் காதலியிடம் தன் காதல் உணர்வுகளை சொல்லுகிறான் காதலன். அதற்காக, ஒரு தகுந்த இடத்தை தேர்ந்தெடுத்து
தன் நண்பர்கள் முன்னிலையில் காதலை அறிவிக்கிறான். கோபுர வாசலிலே என்ற படத்தில் SPB, K.S.சித்ரா பாடிய இந்தப் பாடலை உங்கள் முன் வைக்கிறேன்.

இது மாயமாளவகௌளை ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். என் நண்பர்களுடன் IISc (இந்திய அறிவியற் கழகத்தின்) Gymkhana-வில் அமர்ந்து
கூச்சல் போட்டு திரைமுன் ஆடியது என் நெஞ்சைவிட்டு இன்னும் நீங்கவில்லை.

இதே படத்தில் விரகதாப உணர்வுகளுக்காக சிம்மேந்த்ரமத்யமம் ராகத்தில் அமைந்த S. ஜானகி பாடிய் பாடலுக்கு தங்களை இழக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது.

விரக தாப உணர்வுக்கு இசைஞானி எத்தனையோ பாடல்களை தந்திருக்கிறார். எனக்கு அதில் பிடித்த பாடல்கள் நிறைய இருந்த போதும், இடம், காலம் போறாமையால் இரண்டு பாட்டுக்களை மட்டுமே தருகிறேன். அடுத்த பாட்டு எனக்கு மிக மிகப் பிடித்த ஒரு பாட்டு, வள்ளி என்ற படத்திலிருந்து. இதை கேட்பவர்கள், உள் முழுகி வேறு உலகத்திற்கு சென்று வருவார்கள் என்பதில் எனக்கு எந்த் வித ஐயப்பாடும் கிடையாது. கீரவாணி ராகத்தில் அமைந்த இந்தப் பாட்டைப் பாடியவர் சொர்ணலதா அவர்கள். இந்தப் பாட்டின் original video வெகு நாட்களுக்கு
யூ-டுயுப்பில் கிடைக்கவில்லை. ஏற்றியவருக்கு என் நன்றிகள் பல. இதை கேட்பவர் அனைத்தும் முழு ஒத்திசைவோடு கேட்டு மகிழுமாறு வேண்டுகிறேன்.

முழுமை பெற்ற காதலுக்காக எத்தனையோ பாட்டுக்கள் இருந்தபோதும், 1980-களில் வெளிவந்த இன்றைய இளைஞ்ர்கள் அவ்வளவு கேட்டிராத முத்துக்களை இங்கே தருகிறேன்,

முதல் பாடல் 1982-ல் வெளிவந்து, டைரக்டர் ஸ்ரீதர் இயக்கி, கார்த்திக், ஜெமினி கணேசன் மகள் ஜி.ஜி நடித்து வெளிவந்த நினைவெல்லாம் நித்யா என்ற படத்திலிருந்து ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்ற இந்தப் பாடல்.
வைரமுத்துவின் வைர வரிகளுக்கு இசைஞானியின் இசை வேறென்ன வேண்டும் இல்லையா

அடுத்த பாட்டு, பகடி ராகத்தில் வெளிவந்த மெளனமான நேரம் என்று சலங்கை ஒலியில் ஒலித்த பாடல். சாகர சங்கமம் என்று தெலுங்கில் வெளிவந்து, சலங்கை ஒலி என்று தமிழில் டப் செய்யப்பட்ட படம். கமல், ஜெயப்ரதா நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் திரு. கே.விஸ்வநாத் அவர்கள். அந்தப் பாடல் உங்களுக்காக இங்கே.

இந்த எல்லாப் பாடல்களையும் உணர்வுப் பூர்வமாக ரசியுங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். இதன் தொடர்ச்சியை எதிர்பார்த்து காத்திருங்கள்.

Posted in சினிமா, சமூகம், கட்டுரை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | 8 Comments »

 
Follow

Get every new post delivered to your Inbox.